கவிப்பேரரசு வைரமுத்துவின் மருத்துவ கவிதை


மருத்துவமுறையை மாற்றுங்கள்...

டாக்டர்...
வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி வாய்திறப்போம்!

நாக்கைநீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்!

முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்!
அப்போதுதான்
உண்மையாய் சுவாசிப்போம்!

அவ்வளவுதான்!
அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்!

வாசிக்கமுடியாத கையெழுத்தில்
வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்!

மூன்றுவேளை... என்னும் தேசியகீதத்தை
இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள்!

போதாது டாக்டர்!

எங்கள் தேவை
இதில்லை டாக்டர்!

நோயாளி, பாமரன்! சொல்லிக் கொடுங்கள்!

நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்!

வாய்வழி சுவாசிக்காதே!
காற்றை வடிகட்டும் ஏற்பாடு
வாயிலில்லையென்று சொல்லுங்கள்!

சுவாசிக்கவும் சூத்திரமுண்டு!
எத்துணை பாமரர் இஃதறிவார்?

சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று நுரையீரலின் தரைதொடவேண்டும்!
தரையெங்கேதொடுகிறது?
தலைதானேதொடுகிறது!

சொல்லிக்கொடுங்கள்!

சாராயம் என்னும் திரவத்தீயைத் தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!

கல்லீரல் என்பது கழுதை!
பாரஞ்சுமக்கும் படுத்தால் எழாது!
பயமுறுத்துங்கள்!

ஒருகால்வீக்கம்?
உடனேகவனி!
யானைக்காலின் அறிகுறி!

இருகால்வீக்கம்?
இப்போதேகவனி!
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்!

வாயிலென்ன ஆறாதப்புண்ணா?

மார்பகப்பரப்பில் கரையாதக்கட்டியா?

ஐம்பதுதொட்டதும் பசியேயில்லையா?

சோதிக்கச் சொல்லுங்கள்!

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா வெழுதியிருக்கலாம்!

நோயாளியை துக்கத்திலிருந்து துரத்துங்கள் டாக்டர்!

நோயொன்றும் துக்கமல்ல!

அந்நியக்கசடு வெளியேற உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது!

சர்க்கரையென்பது வியாதியல்ல!
குறைபாடென்று கூறுங்கள்!

செரிக்காதவுணவும் எரிக்காத சக்தியும்
சுடுகாட்டுத்தேரின் சக்கரங்களென்று
சொல்லுங்கள் டாக்டர்!

ஊமை ஜனங்களிவர்
உள்ளொளியற்றவர்!
பிணிவந்து இறப்பினும்
முனிவந்து இறந்ததாய் முணங்குவர்!

சொல்லிக் கொடுங்கள்!

யோகம் என்பது வியாதி தீர்க்கும் வித்தையென்று சொல்லுங்கள்!

உயிர்த்தீயை உருட்டியுருட்டி
நெற்றிப்பொட்டில் நிறுத்தச் சொல்லுங்கள்!

உணவுமுறை திருத்துங்கள்!

தட்டில்மிச்சம் வைக்காதே!
வயிற்றில் மிச்சம்வை!

பசியோடு உட்கார்!
பசியோடு எழுந்திரு!

சொல்லுங்கள் டாக்டர்!

அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்!

பச்சையுணவுக்கு பாடம் நடத்துங்கள்!

மருந்தை யுணவாக்காதே!
உணவை மருந்தாக்கு!

மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா!

கோணாத ஒருவன்
கூனனானான்! ஏனாம்?

அவன் டப்பாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை! ஏனாம்?

அவன் உப்பில்லாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!

ஆரோக்கிய மனிதனுக்குத் தேவை
அரைகிராம் உப்புதானே!

மனிதா...

உப்பைக் கொட்டிக்கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே!
செடிகொடியா நீ?

சிந்திக்கச் சொல்லுங்கள்!

உண்மை இதுதான்!

மனிதனைத்தேடி மரணம் வருவதில்லை!
மரணத்தைத்தேடியே மனிதன் போகிறான்!

டாக்டர்...
எல்லாமனிதரையும் இருகேள்வி கேளுங்கள்!

"பொழுது
மலச் சிக்கலில்லாமல் விடிகிறதா?

மனச் சிக்கலில்லாமல் முடிகிறதா?"

-வைரமுத்து.... 
Share on Google Plus

About Unknown

Myself Suresh Babu S, working as Placement Executive. I am interested in Technology oriented updates. This is my second blog. You can see my first blog @ http://www.enter4source.in
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment